Pages

BITCOIN ஓர் அறிமுகம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
BITCOIN ஓர் அறிமுகம். லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 31 மார்ச், 2014

BITCOIN:பிட்காயின் என்றொரு அதிசயம்

ஆன்லைன் ஜாப்பில் ஈடுபடுபவர்கள் பல தளங்களில் BITCOIN வழியாக பேமெண்ட் பெறும் ஆப்ஷன உள்ளதைப் பார்த்திருக்கலாம்.பலருக்கும் இது பற்றிய குழப்பங்களும் சந்தேகங்களும் எழலாம்.சமீபத்தில் கூட நமது DOLLARSIGNUP தளம் பிட் காயின் விலைக்குத் தேவைப்படுவதாகவும் வைத்துள்ளவர்கள் தொடர்பு கொள்ளலாம் எனவும் அறிவித்திருந்தார்கள்.இது சட்டபூர்வமானதா? இதன் மதிப்பு என்ன? பல விசயங்களுக்கு இந்த‌ கட்டுரை விடையளிக்கிறது.படித்து அறிந்து கொள்ளுங்கள்.

உபயம்:

ஆழம் மாதாந்திர இதழ்

லிங்க்:

http://www.aazham.in/?p=3868




தொழில்நுட்பம் சாத்தியமாக்கிய அற்புத கண்டுபிடிப்புகள் ஏராளம். அந்த வரிசையில் சமீபத்தில் சேர்ந்திருக்கிறது பிட்காயின். சுருக்கமாக, இணைய உலகின் நாணயம் என்று பிட்காயினை அறிமும் செய்யலாம். இணையம்மூலம் ஏற்கெனவே பணப் பரிவர்த்தனை நிகழ்ந்துகொண்டுதானே இருக்கிறது என்று நீங்கள் கேட்கலாம். பிட்காயின் அதற்கும் அப்பாற்பட்டது.
இப்போது நாம் செய்யும் ஆன்லைன் கொடுக்கல் வாங்கல் அனைத்திலும் ரூபாய் அல்லது வேறு கரன்ஸியைப் பயன்படுத்துகிறோம். ரூபாயைக் கட்டுப்படுத்துவது ரிசர்வ் வங்கி. ஆன்லைன் பரிவர்த்தனையில் ஈடுபட, விற்பவர், வாங்குபவர் இருவருமே ஒரு குறிப்பிட்ட தொகையை கணக்கு வைத்திருக்கும் வங்கிக்கும், மாஸ்டர் கார்ட், விசா போன்ற நிறுவனங்களுக்கும் செலுத்தவேண்டியிருக்கும். தவிர, குறிப்பிட்ட தொகைக்கு மேல் வங்கிக்கணக்கில் வைத்திருக்கவேண்டும் போன்ற வரம்புகளையும் இந்த நிறுவனங்கள் விதிக்கக்கூடும். இன்னொரு விஷயம், விற்பவர், வாங்குபவர் இருவரைப் பற்றிய தகவல்களும் வெளிப்படையானவை. ஒருவர் எங்கிருந்து என்ன பொருள் இணையத்தில் வாங்குகிறார் என்பதைக் கண்டுபிடித்துவிடமுடியும்.
பிட்காயினில் இத்தகைய கட்டுப்பாடுகள் எதுவுமில்லை. கெடுபிடிகள் இல்லை. வரம்புகள் இல்லை.
2009ல் க்ரிப்டோகிராஃபி துறையில் சடோஷி நகமொடோ என்பவர் சமர்ப்பித்த ஆய்வறிக்கையில் பிட்காயினின் அடிப்படை பற்றியும் அதை நடைமுறைப்படுத்த ஒரு மாதிரி மென்பொருளையும் ஓப்பன் சோர்ஸ் முறையில் வெளியிட்டார். (இந்த சடோஷி யார்? அவர் தனியாளா அல்லது பலர் சேர்ந்த குழுவா? எதுவும் தெரியாது). பிட்காயின் என்பது தனியுலகம். அதில் இணைபவர்கள் தனியுலகவாசிகள். அவர்களே பணத்தை புதிதாக உருவாக்கி, பரிமாற்றங்கள் செய்து, நடக்கும் பரிமாற்றங்களைச் சரிபார்த்து இயங்குவார்கள். இந்த அமைப்பே பிட்காயின் என்று அழைக்கப்படுகிறது. இங்கு உருவாக்கப்படும் நாணயம் முழுக்க முழுக்க வர்ச்சுவல் உலகுக்கானது. மற்ற கரன்சிகள் மாதிரி அச்சடிக்கப்பட மாட்டாது.
இந்தத் திட்டம் பலரையும் ஈர்த்துவிட்டது. உடனே பிட்காயின் வளரவும் பரவவும் தொடங்கியது. சரி, புதிதாக பிட்காயினை உபயோகிக்க ஒருவருக்கு என்னென்ன தேவை? வாலெட் (பணப்பை) எனப்படும் மென்பொருள் அல்லது செயலியை கணினியிலோ மொபைலிலோ நிறுவவேண்டும். அது உங்களுக்கு ஒரு முகவரியை அளிக்கும். அதன்மூலம் வேண்டிய பொருள்களை பிட்காயின்கள் கொண்டு வாங்கலாம், விற்கலாம்.
இப்போதைக்கு இதற்கு ஏகோபித்த ஆதரவு இல்லையென்றாலும் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை வளர்ந்துவருகிறது. உதாரணத்துக்கு, வேர்டுபிரஸ், ரெட்டிட் போன்றவை பிட்காயின்களை ஒப்புக்கொள்கின்றன.
பிட்காயின்களை அனுப்புவது வெகு சுலபம். வேலட்டை திறந்து, யாருக்கு அனுப்புகிறீர்களோ அவர்களுடைய முகவரி, எவ்வளவு பிட்காயின் என்று அழுத்தினால், முடிந்தது. சரி பிட்காயின்கள் கொடுத்து எதையாவது வாங்கலாம் என்று முடிவெடுத்துவிட்டீர்கள். ஆனால், அவர்களுக்கு கொடுக்க முதலில் பிட்காயின்கள் வேண்டுமே? அதை எப்படிப் பெறுவது? மூன்று வகைகளில் பெறலாம். பங்குச்சந்தைகளில் பணம் கொடுத்து பங்குகள் வாங்குவது போல் பிட்காயின் எக்ஸ்சேஞ்சுகளில் வாங்கிக்கொள்ளலாம். இரண்டாவது முறை பொருட்களை விற்று பணத்துக்குப் பதிலாக பிட்காயின்கள் பெற்றுக்கொள்வது. மூன்றாவது, மைனிங் முறை.
எப்படிக் கனிமங்களைச் சுரங்கங்களில் வெட்டி எடுக்கிறார்களோ, அது மாதிரி பிட்காயின்களை எடுக்க சற்று உழைக்கவேண்டும். ஆனால் சுரங்கத் தொழிலாளர்கள் போலன்றி, குளிரூட்டப்பட்ட அறையில் இருந்தபடியே உழைப்பது சாத்தியம். இங்குதான் பிட்காயினின் அடிப்படையைப் பார்க்கவேண்டியுள்ளது. ஒரு சின்ன எடுத்துக்காட்டு மூலம் இதை பார்க்கலாம்.
கவுண்டமணி செந்திலிடம் ஒரு வாழைப்பழம் வாங்க வேண்டும். அதன் மதிப்பு ஐந்து பிட்காயின்கள் என்று வைத்துக்கொள்வோம். இருவருமே பிட்காயின் வேலட் நிறுவி, ஒரு முகவரியும் வைத்திருக்கிறார்கள். ஒவ்வொரு முகவரிக்கும் பொது, தனி என்று இரண்டு சாவிகள் (கீஸ்) உருவாக்கப்படும். இதில் பொதுச்சாவியை அனைவரிடமும் பகிர்ந்து கொள்ளலாம். தனிச்சாவி நமக்கே நமக்கானது. கைநாட்டு போல என்று வைத்துக்கொள்வோம்.
கவுண்டமணி செந்திலின் முகவரிக்கு ஐந்து பிட்காயின்கள் அனுப்புகிறார். அப்படி அனுப்புகையில் தனிச்சாவி மூலம் கவுண்டமணியின் கைநாட்டு வைக்கப்பட்டு விடும். பிறகு நான் அனுப்பவில்லை, இவ்வளவுதான் அனுப்பினேன் என்றெல்லாம் மாற்றிப் பேச முடியாது. செந்தில் தன்னிடம் பகிரப்பட்டிருக்கும் பொதுச்சாவிமூலம் இதை அனுப்பியது கவுண்டமணிதான் என்று உறுதிப்படுத்திக் கொள்வார். அதாவது அவர்கள் வைத்திருக்கும் மென்பொருள் இது அத்தனையையும் செய்துவிடும்.
இந்தப் பரிவர்த்தனையில் கவுண்டமணியிடம் ஐந்து பிட்காயின்கள் கழிக்கப்பட்டு, செந்திலிடம் கூட்டப்படும். ஆனால் தனியாள்களின் வரவு செலவை பிட்காயின் சேமிப்பதில்லை. அப்படியென்றால் கவுண்டமணியிடம் ஐந்து காயின்கள் தான் இருந்தது என்பது எல்லாருக்கும் எப்படி தெரியும்? பிட்காயினில் நடந்த அத்தனை பரிவர்த்தனைகளும் சோதிக்கப்பட்டு இவரிடம் ஐந்து காயின்கள் வந்து சேர்ந்ததா என்பது ஊர்ஜிதப்படுத்தப்படும். எனவே, அத்தனை பரிமாற்றங்களையும் சேமித்து வைக்க வேண்டிய தேவை எழுகிறது.
அதுதான் பிளாக் செயின் என்கிற மாபெரும் பொதுப்பதிவேடு. பிட்காயினில் இணைந்திருக்கும் அனைவரிடமும் இதன் நகல் இருக்கும். இந்தப் பதிவேட்டில் உலகம் முழுக்க நடக்கும் அத்தனை பிட்காயின் கொடுக்கல் வாங்கலும், ஆதி பிட்காயின் உருவானது முதல், பதிக்கப்பட்டிருக்கும். இந்தப் பதிவேடுதான் பிட்காயினுக்கு அடிப்படை. இதை வைத்து எந்த முகவரியில் யார் என்ன செய்தார்கள் என்று யார்வேண்டுமானாலும் பார்க்க முடியும். அதனாலேயே, ஒவ்வொரு முறையும் நமது முகவரியை மாற்றிக்கொள்ள அறிவுறுத்தப்படுகிறது.
கவுண்டமணி செந்தில் பரிவர்த்தனை உடனே நடந்தாலும், அதை உறுதிப்படுத்த பத்து நிமிடங்கள் வரை ஆகலாம். ஏன் பத்து நிமிடங்கள்? மேலே சொன்ன முறைகளில் யார் எவ்வளவு அனுப்பினார்கள் என்பதை ஊர்ஜிதப்படுத்தத்தான். கடைசியாக செய்யப்பட்ட பரிவர்த்தனை சரியென்று அனைவராலும் ஊர்ஜிதப்படுத்தப்பட்டு பிளாக் செயின் சங்கிலியின் கடைசி இணைப்பாக ஒப்புக்கொள்ளப்பட வேண்டும். இல்லையென்றால் கவுண்டமணி செந்திலிடம் ஐந்து பிட்காயின்கள் கொடுத்து வாங்கிவிட்டு, அந்தத் தகவல் வடிவேலுவைச் சேருமுன், வடிவேலுவிடமும் அதே ஐந்து பிட்காயின்களை உபயோகப்படுத்தி விடுவார்.
இங்குதான் மைனர்ஸ் வருகிறார்கள். இவர்களுடைய வேலை கவுண்டமணியும் செந்திலும் செய்த பரிவர்த்தனை எந்தவிதத் தவறுகளும் பித்தலாட்டமும் இன்றி சரியாக நடந்ததா என்பதைக் கண்டறிவது. பிறகு, ஏற்கெனவே ஊர்ஜிதமாகி இருக்கும் முந்தைய பரிவர்த்தனைகளுடன் இணைப்பது.
ஆனால் ஒவ்வொன்றையும் தனித்தனியாகப் பார்க்காமல் புதிதாக நடந்த, ஆனால் சரிபார்க்கப்படாத சில பரிவர்த்தனைகளை ஒரு கற்றையாக (பிளாக்) எடுத்துக்கொள்கிறார்கள். ஒரே நேரத்தில் உலகம் முழுக்க பலர் இந்த பிளாக்கை உருவாக்க முனைவார்கள். இதில் யாருடைய பிளாக் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என்பதைத் தீர்மானிக்க கணிதப் புதிர் ஒன்று முன்வைக்கப்படும். அதை யார் முதலில் ஊகிக்கிறார்களோ, அவர்களுடைய பிளாக் ஒப்புக்கொள்ளப்படும். இந்தச் சிக்கலான புதிரை அளவுகோலாக வைப்பதன் மூலம் பிட்காயின் நெட்வொர்க்கால் சீராகவும் தவறில்லாமலும் இயங்க முடிகிறது. இந்த வேலையைச் செய்ததற்குக் கூலியாக தொழிலாளிகளுக்கு இருபத்தைந்து பிட்காயின்கள் வழங்கப்படும்.
இந்தச் சுரங்க வேலையை, அதாவது சரிபார்த்தலை, யார் வேண்டுமானாலும் செய்யமுடியாது. அது ஒரு சிக்கலான புதிர். ஒரு நொடியில் பல ஊகங்களை கொடுத்தாலொழிய உங்களுடைய விடை முதலில் ஒப்புக்கொள்ளப்பட வாய்ப்புகள் மிகக்குறைவு. அதைச் செய்ய கருவிகள் உள்ளன. (சக்தி வாய்ந்த பிரத்தியேக கணினிகள் என்று வைத்துக்கொள்வோம்). அவை சந்தையில் பலவாரியாக விற்பனைக்குக் கிடைக்கிறது. லட்சங்களில்கூட உண்டு. சில லட்சங்களை பிட்காயினில் முதலீடு செய்துள்ள ஐஐடி மாணவர்களைப் பற்றிய செய்திகளும் படிக்கக் கிடைக்கின்றன.
இவ்வளவு பணம் கொட்டி வாங்கியும் தனியாளாக அந்தப் புதிரை கணிப்பது முடியாத காரியம். எனவே பலர் கூட்டாக இணைந்து இந்த ஊகங்களை செய்கின்றனர். இதற்காகவே ஙிஜிசிநிuவீறீபீ, பீமீமீஜீதீவீt போன்ற குழுக்கள் இயங்குகின்றன. பதிவு செய்துகொண்டு உங்கள் கணினியையும் இணைத்துவிடவேண்டியதுதான். ஒவ்வொரு முதல் கணிப்புக்கும் வரும் 25 பிட்காயின்களை அவர்களுக்குள் பிரித்துக்கொள்கிறார்கள்.
இப்படி உருவாக்கப்படும் பிளாக் செயின் அதி பாதுகாப்பாக இருக்கும். எந்தப் பரிமாற்றத்தையும் யாராலும் மாற்றமுடியாது. எங்காவது ஓரிடத்தில் கை வைத்தால்கூட அதற்குப் பின் பிளாக் செயினில் உள்ள அனைத்தும் காலாவதியாகிவிடும். மேலும் தனியொருவரால் இந்தப் புதிர்களை தீர்ப்பது, தொடர்ந்து பிளாக்குகளை உருவாக்குவது போன்றவற்றைச் செய்யவே முடியாது. அதனால் யாராலும் இதனைக் கட்டுப்படுத்தவும் முடியாது.
உண்மையில் மைனிங்கில் ஈடுபடுபவர்களுக்கு இந்தச் சமாச்சாரங்கள் தெரியவேண்டிய அவசியமில்லை. கணக்கு தொடங்கு, புதிர் தீர்க்க கருவியை வாங்கிவிட்டால் போதும். மிச்ச வேலைகளை கணினியே பார்த்துக்கொள்ளும்.
சரிபார்க்க ஆகும் பத்து நிமிடங்கள் என்பது இப்போதைக்கு இருக்கும் பிட்காயின் நெட்வொர்க்கின் சிக்கல் அளவுதான். நாளடைவில், இந்தச் சிக்கலின் அளவு அதிகரிக்கப்பட்டு கணிதப் புதிருக்கு விடை காண கூடுதல் நேரம் பிடிக்கக்கூடும். அதாவது புதிய பிட்காயின்கள் உருவாக்கப்படுவது மட்டுப்படும். மேலும் இன்று இருபத்தைந்து பிட்காயின்களாக இருக்கும் கூலி நான்கு வருடங்களுக்கு ஒருமுறை பாதியாகக் குறைக்கப்படும் (பிட்காயின் தொடக்கத்தில் கூலி ஐம்பது காயின்களாக இருந்தது). இப்படி புதிதாக கிடைக்கும் பிட்காயின்களின் வேகத்தை மட்டுப்படுத்துவதன்மூலம் அதன் மதிப்பு அதிகரிக்கிறது. எப்படி அலுமினியம் சொற்பமாகக் கிடைத்த ஒரு காலத்தில் தங்கத்தைவிட அது விலை அதிகமாக இருந்ததோ அது மாதிரி!
ஆனால் இப்படி உருவாக்கிக்கொண்டே போனால், நாளடைவில் எல்லாரும் ஆயிரக்கணக்கில், லட்சக்கணக்கில் பிட்காயின்கள்ச் சேகரித்து விடுவார்களே? அதற்குதான் பிட்காயின் ஆரம்பிக்கப்பட்ட போதே மொத்தமாக 2.1 கோடி பிட்காயின்கள் மட்டுமே உருவாக்கப்படும் என்று நிர்ணயிக்கப்பட்டது. இது போதுமா? நாம் பைசா என்று சொல்வது போல் பிட்காயினில் சடோஷி என்று சொல்கிறார்கள். அதன் மதிப்பு 0.00000001 பிட்காயின். இப்படி ஒரு பிட்காயினையே பல கூறுகளாகப் பிரிப்பதால் இந்த எண்ணிக்கையே போதுமாம்.
நான்கு வருடங்களுக்கு ஒரு முறை குறைக்கப்படும் கூலி, அதிகரிக்கும் கணிதப் புதிரின் சிக்கல் ஆகியவற்றால் அந்த உச்சபட்ச அளவை எட்டிப்பிடிப்பது 2140 ஆம் ஆண்டில்தான் முடியும் என்று சொல்லப்படுகிறது.
அதன்பிறகு முழுக்க முழுக்க வாங்குபவரும் விற்பவரும் கொடுக்கும் கூலி மூலமாகவே தொழிலாளிகள் இயங்க முடியும்.  அதனால் கூடுதல் கூலி கொடுப்பவர்களின் பரிவர்த்தனை முதலில் சரிபார்க்கப்படும். (இப்போதும் கூட இருபத்தைந்து பிட்காயின்கள் கூடவே விற்பவர்/வாங்குபவர் தங்களது பரிவர்த்தனைக்கு முக்கியத்துவம் அளிக்க சிறிது கூலி கொடுப்பதுண்டு). ஆனால் இந்தக் கூலி நிச்சயம் வங்கிகள்/சேவைதாரர்களின் வரியைவிடக் குறைவாகவே இருக்கும் என்கிறார்கள்.
கூடியவிரைவில் அரசாங்கங்களே ஏற்றுக்கொள்ளும் முறையாக பிட்காயின் பரிணாம வளர்ச்சி அடையலாம் என்னும் எதிர்பார்ப்பும் மிகுதியாகவே இருக்கிறது. இந்திய ரிசர்வ் வங்கி,‘வேண்டுமென்றால் உபயோகித்துக்கொள், பிரச்னை என்றால் என்னைக் கேட்காதே’ என்பது மாதிரியான வழிகாட்டுதலையே அளித்திருக்கிறது. இதிலும் நியாயம் இருக்கத்தான் செய்கிறது. 2013ல் ஒரு பிட்காயினின் மதிப்பு 16,000 ரூபாய். ஆனால் அடுத்த நாளே ஒரு ரூபாய் ஆனாலும் யாரையும் போய் கேட்கமுடியாது. .அதுமட்டுமில்லாமல் இதற்கு இவ்வளவு மதிப்பு இருக்கிறது என்கிற நம்பிக்கை அனைவருக்கும் இருக்கும் வரைதான் அந்த மதிப்பு தக்கவைக்கப்படும். (இது எல்லா பண்டங்களுக்குமே பொருந்தும்).
செய்துவிட்ட ஒரு பரிவர்த்தனையை திரும்பப்பெறுவது என்பதும் இங்கு நடக்காது. சொல்லப்போனால் இதை அடிப்படையாகக்கொண்டுதான் பிட்காயினை உருவாக்கினார் சடோஷி. ‘நீ தெரியாமல் கூடுதலாக அனுப்பிவிட்டாய்’ என்று பிட்காயின்களை ஒருவர் திருப்பிக் கொடுத்தால்தான் உண்டு.
மேலும் யார் விற்கிறார்கள், வாங்குகிறார்கள் என்பது தெரியாது என்பதால் லஞ்சம், சட்டத்துக்குப் புறம்பான விஷயங்களின் வியாபாரம் (போதைப் பொருட்கள், ஆயுதங்கள்) போன்றவை பெருகக்கூடும். அப்படியெல்லாம் நடக்காது என்று சொல்லப்பட்டாலும், கணினியில்/மொபைலில் மட்டும் வைத்திருப்பதால், அதில் ஏதாவது கோளாறு வந்தாலோ யாராவது ஹேக் செய்தாலோ மொத்தமும் போய் விடக்கூடிய அபாயத்தையும் புறந்தள்ளிவிடமுடியாது.


விக்கிபீடியா முதன்முதலில் வந்தபோது உலகம் முழுக்க இருக்கும் பயனர்கள் அவர்களாகவே தகவல்களை உருவாக்கி, எடிட் செய்து அறிவுக்களஞ்சியத்தை உருவாக்குவார்கள் என்று சொல்லப்பட்டது. அது சாத்தியமே இல்லை, அப்படியொரு களஞ்சியம் உருவாகாது என்று பலர் ஆரூடம் சொன்னார்கள். ஆனால் கற்பனைக்கு எட்டாதபடிக்கு விக்கிபீடியா இன்று தகவல் புதையலாக வளர்ந்து நிற்கிறது. பிட்காயினும் இதே போன்ற வளர்ச்சியை எட்டலாம். இப்போதே அதைப் பற்றிய ஓர் அறிமுகத்தைத் தெரிந்துகொண்டுவிடுவது நல்லது அல்லவா?